உடுப்பிட்டி இளந்தளிர் மழலைகளின் நாடகத்தால் நெகிழ்ச்சி - வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிய கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் (Video)


வடமராட்சி - உடுப்பிட்டி தெற்கு இளந்தளிர் முன்பள்ளியின் கலைவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்தார். 


குறித்த நிகழ்வில் சுற்றுச் சூழல் பாதுகாப்போம் என்கிற தொனிப்பொருளில் ஐந்து வயது மாணவர்களின் பங்கேற்புடன் குப்பைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியதான விழிப்புணர்வு நாடகம் முன்பள்ளியின் இறுதியாண்டு மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. 

குறித்த நாடகத்தை கூர்ந்து அவதானித்த கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளரான  குமாரசாமி சுரேந்திரன் அவர்கள் உரையாற்றும் போது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 

சூழலை தூய்மைப்படுத்துவோம் என்கிற தொனிப்பொருளில் நாடகம் இருந்தது. அந்த நாடகத்திற்காகவே இந்த முன்பள்ளி மாணவர்களுக்கு சூழலை தூய்மைப்படுத்தும் நோக்கோடு எமது பிரதேச சபையினால் 65000 ரூபாய் பெறுமதியான நான்கு வர்ணங்களை உடைய குப்பைகளை பிரித்துப் போடும் வசதியுள்ள குப்பைத்தொட்டியினை வழங்குவதற்கு எண்ணியுள்ளேன். 

அத்தோடு உடுப்பிட்டி சனசமூக நிலையம் அருகில்  40000 ரூபாய் பெறுமதியான பிளாஸ்ரிக் போத்தல்களை வீதிகளில் எறிந்துவிடாமல் அவற்றை பாதுகாப்பாக சேகரிக்கும் போத்தல் கூடை ஒன்றையும் மாணவர்களின் முன்மாதிரிக்காக உங்களுக்கு தருவதாக எண்ணியிருக்கின்றேன். 

நாளைய தினம் (திங்கட்கிழமை) உங்களுடைய இடத்துக்கு மேற்படி கழிவகற்றும் தொட்டிகள் வந்து சேரும் என்பதனை உறுதியளிக்கிறேன். என்றார். 

வாக்குறுதியை சொன்னபடி நிறைவேற்றிய தவிசாளர் 

இன்று திங்கட்கிழமை மாலை குறித்த கழிவகற்றும் தொட்டிகள் தவிசாளர் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. குறித்த செயற்பாட்டின் போது  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன், பிரதேசசபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன், பிரதேச சபையின் உபதவிசாளர் தியாகராசா தயாபரன், உடுப்பிட்டி  வட்டார உறுப்பினர் ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இன்று தேசிய அளவில் திண்மக்கழிவகற்றலும், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றலும் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில் சிறார்களின் சுற்றுச் சூழல்சார் விழிப்புணர்வு நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த கரவெட்டி தவிசாளரின் செயலை உடுப்பிட்டி வாழ் மக்கள் பாராட்டியுள்ளனர். 



Post a Comment

0 Comments