திரு. செல்வரட்ணம் தயானந்தன் : ஊருக்கும் - புலம்பெயர் தேசத்துக்கும் உறவுப் பாலமாக இருந்தவர்


மரண அறிவித்தல் : செல்வரட்ணம் தயானந்தன்

ஓய்வுநிலை நில அளவையாளரும், உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூக சேவையாளருமான செல்வரட்ணம் தயானந்தன் அவர்கள் இன்று 10.01.2025 சனிக்கிழமை இரவு தெல்லிப்பழை வைத்தியசாலையில் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை 18.01.2025 காலை உடுப்பிட்டி தெற்கு (சமுர்த்தி வங்கி முன்பு) உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------



உடுப்பிட்டியின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்ட மக்கள் சேவையாளன் - அன்னாரின் மறைவு உடுப்பிட்டிக்கு பேரிழப்பு   

நெஞ்சார்ந்த அஞ்சலிகள் ஐயா 

திரு. செல்வரட்ணம் தயானந்தன் அவர்களது கால்தடம்பட்ட இடத்தில் புல்லுக்கூட சாகாது என்று ஊரில் சொல்வார்கள். யாருடைய மனதையும் நோகடிக்காமல், அன்பாக, பண்பாக பேசும் இயல்புடையவர். 

எடுத்த காரியங்களை உண்மையுடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும் நிறைவேற்றுவார். 

இயல்பிலேயே பிறருக்கு உதவும் குணம் கொண்ட அவர் ஊரின் சமூக நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற முதலே மாணவர்கள், உதவி தேவைப்படும் மக்களுக்கு தன்னாலியன்ற உதவிகளை வழங்கி வந்தவராவார். 

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம், இலங்கை வல்லை நூற்றல் நெய்தல் ஆலை (வல்லை நெசவாலை), சைவப்பிரகாச வித்தியாசாலை, தென்னிந்திய திருச்சபை, பண்டகைப் பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட 

உடுப்பிட்டி தெற்கில் உள்ள பல்வேறு சமூக மட்ட அமைப்புகளுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி பொறுப்புகளை செம்மையாக நிறைவேற்றியவர்.

இரு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஊருக்கும் - புலம்பெயர் தேசத்துக்கும் உறவுப்பாலமாக இருந்தவர். ஊரில் என்ன உதவியென்றாலும் அது தயானந்தம் அவர்கள் ஊடாகத்தான் வழங்கப்படும். நிதியுதவி தொடர்பிலான கணக்குகளை சரியாக பேணி வெளிப்படுத்துவார். பொறுப்புக் கூறுவார். அந்தளவுக்கு ஊர்மக்களும், புலம்பெயர் மக்களும் அவரை உண்மையாக நேசித்தார்கள். அதற்கு அவரும் நம்பிக்கையாக இருந்தார். 

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தில் பல ஆண்டுகளாக தலைவராக இருந்தவர். இவரது தலைமையை ஊரிலும், புலத்திலும் எல்லோரும் விரும்பினார்கள். இறுதியாக முதுமை காரணமாக தன்னால் தலைமைப் பொறுப்பு வகிக்க முடியாது என பலதடவைகள் கேட்டு விலகிக் கொண்டார்.

புலிகள் - சிறீலங்கா அரசு இடையே போர் தீவிரமாக இடம்பெற்ற காலங்களில் கூட பொது நோக்கு மண்டபம், சமுர்த்தி வங்கி போன்ற சமூக நிறுவனங்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்க உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் பல்வேறு தடைகளையும் தாண்டி கிழக்கு மாகாணம் சென்று கொடையாளரிடம் இருந்து காணிகளைப் பெற்று பொது நோக்கத்திற்காக வழங்கியவர். பின்பு குறித்த காணியில் ஒரு பகுதியில் தான் கலாசார மண்டபம் கட்டப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

வீட்டுத்தேவையோ, சமூக சேவையோ எதுவென்றாலும் தனது கடைசிக் காலங்கள் வரை சைக்கிளினையே பெரும்பாலும் பயணத்துக்கு பயன்படுத்துவார்.

சமூக வேலைக்காக என்று  பிறரிடம் நேரம் கேட்டால் கூட நான் உங்களை கஸ்டப்படுத்துகிறேன் என திரும்பத் திரும்பக் கூறுவார். எல்லாரும் நல்லாயிருக்க வேண்டும் என்பார். யாருக்கும் வாழ்நாளில் சிறிதளவு தீங்கும் இழைக்கக் கூடாது என்பார். 

போர்க்காலங்களில் ஊரில் கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் நிகழ்ந்த போதெல்லாம் எம்மூர் இளைஞர்களுக்காக காவல் நிலையம் வரை சென்று பேசி மீட்டிருக்கிறார்.

மக்கள் நலன் பேணும் எந்த திட்டமானாலும் அது நிறைவேற வேண்டுமென்பதில் உண்மையாகவும் அக்கறையாகவும் இருந்து நிறைவேற ஒத்துழைப்பவர்.

ஒருமுறை, எவ்வாறு சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் வந்தது என கேட்ட போது, தான் நேரத்துக்கே பென்சன் எடுத்து விட்டேன். அப்போது நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது.  அது எனக்கு சமூக சேவை செய்ய வசதியாக இருந்தது.  என்பார். 

முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்த தயானந்தம் அவர்களது நல்ல இயல்புகளை, பண்புகளை அனைவரும் பின்பற்றுவது அவசியமாகும். 

என்றுமே இணைபிரியாமல் வாழ்ந்த தயானந்தன் அவர்களது மனைவி அண்மையில் காலமான நிலையில் ஒரு மாதத்துக்குள் தயானந்தன் அவர்களும் காலமானமை உடுப்பிட்டியூர் மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரு தயானந்தம் அவர்களின் சமூகப்பணியின் சில துளிகளை இங்கே பதிவு செய்துள்ளேன். அவரை நன்கறிந்தவர்கள் RIP என்று மட்டும் போட்டு கடந்து செல்லாமல் ஒரு வரியாவது எழுதி செல்லுங்கள். சமூகத்திற்காக உழைத்தவர்களை சமூகம் ஒரு நாளும் மறக்கக் கூடாது.  

செ. கிரிசாந்- 



Post a Comment

0 Comments