நடமாடும் வியாபாரங்கள் பிரதேச சபையில் முன் அனுமதி பெற வேண்டும் - கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர்

 


வீட்டு வளவுகளுக்குள் அத்துமீறி நுழையும் நடமாடும் வியாபாரிகள் - நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களின் விபரங்களும் பிரதேச சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் - தவறின் நடமாடும் வியாபாரிகளுக்கு நீதிமன்றமூடாக நடவடிக்கை - பிரதேச சபையின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் வருமானப் பரிசோதகர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கிய கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் 

பழைய பொருள்களை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் வீடு வளவுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடாத்தாக எடுத்துச் செல்லும் பல சம்பவங்கள் வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன. 

முதியவர்கள், பெண்கள், ஆளில்லாதவர்களின் வீடுகளை இனங்கண்டு வளவுக்குள் அத்துமீறி  நுழையும் பழைய பொருள்களை சேகரிக்கும் போர்வையில் வருவோர் கையில் அகப்படும் பொருள்களையெல்லாம் அடாத்தாக எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்ஸநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, அவர் சபையின் தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் அவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனுமதியின்றி வீட்டு வளவுக்குள் நுழைவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு பிரதேச சபையின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் வருமானப் பரிசோதகர்களுக்கும் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிக்கள கடமையில் ஈடுபடும் சபையின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பாதுகாப்பை தங்கள் சமூகக் கடமையாகக் கருதி வீதியில் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள், சாரதிகளின் விபரங்களையும் தங்கள் தினக்குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். 

கரவெட்டி பிரதேச சபைக்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் பிரதேச சபையில் முன் அனுமதியினைப் பெற வேண்டும். அது வாராந்தம் திங்கட்கிழமைகளில் புதுப்பிக்கப்படல் வேண்டும். உடனடியாக பதிவு செய்யப்படாத வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 

பிரதேசசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாகனம் சென்று வரும் இடங்களும் கோரிக்கை கடிதத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். குறித்த பிரிவின் பொலிஸ் நிலையத்துக்கு திரட்டப்படும் விபரங்கள் செயலாளரூடாக அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் மாலை 5.30 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. 

நடமாடும் வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுமாறும் செயலாளரினால் அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments