யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகராட்சியின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியைச் சேர்ந்த தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இன்று 18.06.2025 காலை 8.30 மணிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு பகிரங்கமாக இடம்பெற்றது.
மொத்தமாக 16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகராட்சிக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 பேரும் நடுநிலை வகித்தனர்.
உபதவிசாளராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாகதம்பி பத்மநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன், மனித உரிமை செயற்பாட்டாளர் டோமினிக் பிறேமானந், கரவெட்டி பிரதேச சபையின் உபதவிசாளர் தியாகராசா தயாபரன் மற்றும் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments