சந்நிதியான் ஆலயத்தில் வாகனப் பாதுகாப்புக்கு இரு மடங்கு கட்டணங்களை அறவிடும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்

 


ஏழை எளிய மக்களின் இறுதி ஆன்மீகப் புகலிடமாக விளங்கும் ஆலயங்களில் முதன்மையானது தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன்  ஆலயமாகும். பக்தர்கள் தங்கள் துன்பதுயரங்களை, ஆற்றாமைகளை, நோய் நொடிகளை, பொருளாதார கஷ்டங்களை சொல்லி முருகனிடம் வேண்டுவர். 

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள், சிறு விவசாயம் செய்வோர், மீனவர்கள், சிறு சிறு தொழில் செய்வோர், நிரந்தர வேலைகளின்றி கஷ்டப்படுவோர் என பல்வேறு தரப்பினர் தங்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த எளிய முருகனை நாடி வருகின்றனர்.   

வருடத்தில் தினமும் வருபவர்கள், வாரத்தில் வெள்ளி, ஞாயிறு போன்ற நாள்களில் வருபவர்கள், விசேட தினங்களில் வருபவர்கள், மகோற்சவ காலங்களில் வருபவர்கள் என பலதரப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்கள்.  

சந்நிதி ஆலய மகோற்சவ காலங்களில் இவர்களில் பலர் வழமையாக தொழிலுக்கும் செல்வதில்லை. இக்காலப்பகுதியில் இவர்களது தினசரி வருமானம் முற்றிலும் தடைப்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வந்து முருகனை தரிசிப்பர். 

தங்களின் தீர்க்க முடியாத துன்பதுயரங்கள், உள்ளத்தில் எழும் ஆற்றாமைகள், உடலை வதைக்கும் நோய் நொடிகள் மற்றும் அன்றாட வாழ்வை முடக்கும் பொருளாதார கஷ்டங்கள் அனைத்தையும் சந்நிதியான் பாதத்தில் சமர்ப்பித்து மனமுருகி வேண்டுகின்றனர். 

🚨வாகன பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களின் தலைமேல் மேலும் சுமையை ஏற்றும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்  



சொகுசு வாகனங்களோ ஆடம்பரங்களோ இன்றி, கால்நடையாகவோ அல்லது மோட்டார் சைக்கிள்களில் வரும் இந்த பக்தர்களுக்கு, சந்நிதியான் மட்டுமே மாபெரும் ஆறுதலாக விளங்குகிறான். இவ்வாறு தங்களின் பெரும் நோய்கள், துன்பங்கள், பிரச்சினைகளோடு வரும் ஏழை மக்களிடம், வாகனப் பாதுகாப்புக் கட்டணம் என்ற பெயரில் வல்வெட்டித்துறை நகராட்சியினர் இரண்டு மடங்கு  தொகையை கட்டணமாக அறவிடுவது அவர்களின் சுமையை மேலும் அதிகமாக்குகிறது. 

நல்லூர் திருவிழாவில் யாழ்ப்பாணம் மாநகரசபை கூட மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாவும், தலைக்கவச பாதுகாப்புக்கு 10 ரூபாவும் மட்டுமே கட்டணமாக அறவிடுகின்றனர்.  


🚨மக்கள் சேவையில் முன்னுதாரணமாக விளங்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை 

சந்நிதியான் இரும்பு பாலத்தடியில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கலைக்கதிர் சனசமூக நிலையத்தினர் நடாத்தும் வாகன பாதுகாப்பு நிலையத்தில் கூட மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாவும், தலைக்கவச பாதுகாப்புக்கு 10 ரூபாவும், முச்சக்கர வண்டிகளுக்கு 50 ரூபாவும் மட்டுமே கட்டணமாக அறவிடுகின்றனர்.  


அதில் சேரும் வாகன பாதுகாப்பு குத்தகையின் மொத்த தொகையில் 75 வீதம் சனசமூக நிலையத்துக்கும், 25 வீதம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கும் சேர்கிறது. மக்களுக்கு நீதியான விலையில் வாகன பாதுகாப்பு சேவைகளை வழங்குவதோடு சமூகத்தின் அங்கமான சனசமூக நிலையங்களையும் வளர்க்கும் அருமையான திட்டமல்லவா இது. 


வாகன பாதுகாப்பு குத்தகை என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் இரட்டிப்பு கட்டணத்தை அறவிட்டு தனியொருவரை அதிக பணக்காரனாக்கும் திட்டமல்ல.   இன்று ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனங்களாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளே காணப்படுகின்றன.  


🚨 வாகன பாதுகாப்புக்கு இருமடங்கு கட்டணம் அறவீடு 

ஆனால் வல்வெட்டித்துறை நகரசபையின் தண்ணீர் தாங்கியடி மற்றும் ஆலய முன் பகுதிகளில் உள்ள வாகன பாதுகாப்பு நிலையங்களில் மோட்டார் சைக்கிளுக்கு 50 ரூபாவும், தலைக்கவசத்துக்கு 20 ரூபாவும், முச்சக்கர வண்டிக்கு 100 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது. தலைக்கவச பாதுகாப்புக்கு சில வேளைகளில் 30 ரூபாவும், இரு தலைக்கவசங்களை பாதுகாக்க 50 ரூபாய் கொடுத்தால் மீதியை கொடுப்பதில்லை எனவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

கடந்த ஆண்டும் தலைக்கவசம் ஒன்றை பாதுகாக்க 50 ரூபாய் அறவிட்ட நிலையும் இருந்தது.  இவ்வாறான முறைகேடுகளுக்கு காரணம் வல்வெட்டித்துறை நகரசபையை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வாகன பாதுகாப்பு நிலையத்தில் தொடர்ச்சியாக இருந்து கண்காணிப்பதில்லை எனவும், அவர்கள் ஆலய வடக்கு வீதியிலுள்ள உற்சவ கால பணிமனையிலேயே இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

🚨 அதிகரித்த கட்டணத்துக்கு காரணம்  நகரசபையின் ஏகோபித்த தீர்மானம் என்கிறார் நகரசபை பதில் தவிசாளர்

அதிகரித்த கட்டணம் தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை பதில் தவிசாளர் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகதம்பி பத்மநாதன் அவர்களை கேட்ட போது அது நகரசபையின் ஏகோபித்த தீர்மானம் என்கிறார். அப்பாவி மக்களிடம் அதிக தொகையை வசூலிக்கும் மக்கள் விரோத தீர்மானத்தை எடுக்கவா மக்கள் நகராட்சி மன்றத்துக்கு உறுப்பினர்களை மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தனர்?  

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினர் சந்நிதிக்கு வரும் பெரும் வர்த்தக நிறுவனங்களிடம், வியாபாரிகளிடம் குத்தகை தொகையாக அதிக தொகையை அறவிட முடியும். ஆனால், எளிய பக்தர்கள் அதிகம் வரும் சந்நிதி ஆலயத்தின், வாகன பாதுகாப்பு நிலைய குத்தகையை அதிக தொகைக்கு கொடுத்து விட்டு அதனை அப்பாவி பக்தர்களின் தலையில் கட்டுவதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. 

மன அமைதிக்காகவும் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறவும் ஆலயத்தை நாடி வரும் எளிய பக்தர்களுக்கு, இக்கட்டணம் ஒரு புதிய பொருளாதார நெருக்கடியாக மாறுகிறது. தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கும் இக்கட்டணம் ஒரு பெரிய சுமையாகும். 

ஆன்மீக வழிபாட்டிற்குச் செல்லும் இடத்தில் கூட பணச் சுமை ஏற்படுவது பக்தர்களை மேலும் வருத்துகிறது. இதனால் சில நேரங்களில் குடும்பத்துடன் வருவதற்குப் பதிலாக பலர் வருவதைத் தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது. 

கட்டணங்களைக் குறைத்தால் மேலும் பல ஏழை எளிய மக்கள் தடையின்றி வந்து முருகனை தரிசிக்க செய்ய முடியும். ஆகவே, மக்களின் வறுமையையும் அவர்களின் ஆன்மீகத் தேவையையும் உணர்ந்து, வல்வெட்டித்துறை நகரசபையினர் வாகனப் பாதுகாப்புக் கட்டணங்களை முழுமையாக நீக்கவோ அல்லது மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்கவோ வேண்டும். இதுவே சந்நிதியான் காட்டும் கருணைக்கும், அவன் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் செய்யும் உண்மையான தொண்டாகும்.

இனிவரும் நாள்கள் முக்கியமான திருவிழாக்கள் உள்ளதனால், பக்தர்கள் அதிகம் வருவார்கள், ஆகவே பக்தர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் உடனடியாகச் சாதகமான ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். 

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களிடம் வாகனப் பாதுகாப்பு என்கிற பெயரில் அதிகரித்த கட்டணங்களை அறவிடுவதனை தவிர்க்குமாறு வல்வெட்டித்துறை நகரசபையிடம் ஆலய பக்தர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.   

மக்களின் நலனுக்காகவும் அவர்களுக்கு திருப்தியான சேவை வழங்கவுமே உள்ளூராட்சி மன்றங்களை மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ளனர். நிர்வாக வசதிக்காகவே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் மக்களின் நலனை ஒரேயடியாக மிதித்து விட்டு தடம் மாறி செல்வதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. 

ஆண்டவன் முன்னிலையில் அனைவரும் சமம் ஆவர். செல்வந்தர்களுக்கு மட்டும் உரியது அல்ல ஆலயம்; ஏழை எளிய மற்றும் எளிய மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் உரித்தானதே கடவுளின் சந்நிதி.


செ. கிரிசாந் 

21.08.2026

#SelvaSannithiMuruganTemple #Selvachannithy #Thondaimanaru #SellaSannathy #Jaffnamurugantemple  #Annathanakkanthan

Post a Comment

0 Comments