யாழில் திடீரென பரவும் வைரஸ் தொற்றால் ஏராளமான நாய்கள் இறப்பு

 


யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக நாய்களிடையே பரவு கேனைன் டிஸ்டம்பர் என்ற வைரஸ் தொற்றால் ஏராளமான நாய்கள் இறந்துள்ளன என்று அறிய வருகிறது.

இந்த வைரஸ் காற்றின் மூலமாக நாய்களில் பரவுகிறது. வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நாய்களை காப்பாற்ற முடியாது. எனினும், தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் இந்த வைரஸிலிருந்து தமது செல்லப் பிராணிகளை காப்பாற்ற முடியும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இந்த வைரஸ் நோய் தாக்கத்தால் நடுக்கத்துடன் காய்ச்சலும் காணப்படும் நிலையில் நாய்கள் இறக்கின்ற போதிலும் கால்நடை திணைக்களம் போதிய விழிப்புணர்வையோ அல்லது தடுப்பூசி திட்டங்களையோ மேற்கொள்ளவில்லை என்றும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் நாய்கள், ஓநாய், நரி போன்ற காட்டு விலங்குகளையே தாக்கும். இதனால், மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
இது தொடர்பில் கால்நடை திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் எஸ். வசீகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்த வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கால்நடை திணைக்களத்திடம் இல்லை. எனினும்;, வீடுகளில் கட்டி வளர்க்கப்படும் நாய்களுக்கு இந்த வைரஸ் பரவுவதில்லை. இது தொடர்பில் ஓரளவுக்கு விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் தமது வளர்ப்பு நாய்களுக்கு ஒழுங்குமுறையாக தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலமும் தெருவில் விடாமல் வீட்டுச் சூழலியே பராமரிப்பதன் மூலமும் தமது செல்லப் பிராணிகளை இந்த வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் - என்றார்.

Post a Comment

0 Comments